Friday, 20 July, 2012

இரகசிய சிநேகிதி....

எனக்கு மலர் பிடிக்கும், மழை பிடிக்கும் 
எனப் பிடித்தவை அனைத்தையும் 
தங்குதடையின்றி சொன்ன என்னிலே 
சிறு தடுமாற்றம்..!!!

முதன்முறையாய் மொழி மாற்றினேன்;
என்  சிநேகிதிக்கு உன்னை பிடிக்குமென்று!

நீ அறிவாயோ?
நானே அந்த இரகசிய சிநேகிதி என்று!!!!!

நான் மறைத்ததை அறிந்தும் அறியாதவனாய்;
தெரிந்தும் தெரியாதவனாய்; மௌனமாய் கேட்கிறாய்;
என்னையெல்லாம் யாருக்குப் பிடிக்குமென்று??????

உன்னை யாருக்குத்தான் பிடிக்காது என்று 
உள்ளுக்குள் தோன்றினாலும், 
உதடுகள் கூறின......
உன்னை வேறு யாருக்குப் பிடிக்க வேண்டும் 
என்னைத் தவிர!!!?

என் மனதில் புதைந்த மர்மத்தை 
அவிழ்த்த  மமதையில் 
மர்மமாய் சிரிக்கிறாய் நீ 
மன்மதனாய்!!!!!!!!!

அப்போது தான் தெரிந்தது,
எனக்கு மட்டுமல்ல; உனக்கும் நானே 
இரகசிய சிநேகிதி என்று.......!

Thursday, 19 July, 2012

நீ, நான், அது.....அன்று முதல் இன்று வரை,
ஆதி முதல் அந்தம் வரை.

அனைவரும் அருகிருக்கையிலும்,
அமைதியாய் தனிதிருக்கையிலும்.

உன் விழி பார்த்த நொடி முதல்,
என் விழி மூடும் நொடி வரை.

புது தம்பதியராய் ஜொலித்த போதிலும்,
முதிர் தம்பதியராய் திளைத்த போதிலும்.

குழந்தைக்கனவுடன் கழித்த காலத்திலும்,
குழந்தையே கனவாய் போன காலத்திலும்.

காமம் செறிந்த தருணத்தில் நம்,
மடியில் விளையாடும் குழந்தையாய்.

காயம் பட்ட தருணத்தில் நம்,
கண்ணீர் துடைக்கும் விரல்களாய்.

நாம் அடித்தாலும் சரி, அனைத்தாலும் சரி,
இறுதிவரை இருவரோடும் இணைந்து இருக்கும்.

நம் பூஜையறை, சமையலறை, படுக்கையறை என 
எங்கிலும் ஒட்டிக்கொண்டு உயிர்வாழும்,
     கடைசிவரை!!!
நம்மோடு நம் காதலும்........

Friday, 23 March, 2012

விளக்கேற்ற வந்தவள்...!!!


உன் வீட்டுக்குள் நான்
அடியெடுத்து வைக்கும்
ஒவ்வொரு முறையும்;
மின்சாரம் மரணத்தை தழுவுகிறது...


ஆயிரம் பேருக்கு
அபசகுணமாய் தோன்றலாம்;
ஆனால்என் மனமோ
மகிழ்ச்சியில் மறுதழிக்கின்றது...


என் உதடுகளோ
உளறத் துடிக்கின்றது;
நாயகன் நீயும்
நாசுக்காய் சிரிக்கிறாய்...


நம் இருவருக்குமட்டும்
ஒரே உள்ளுணர்வு

"உன் வீட்டுக்கு விளக்கேற்ற வந்தவள் நான்" என்று...!!!

 

Monday, 19 March, 2012

காயம்...!!!காற்றலையும்


என்னைக் காயப்படுத்துகிறது;


உன் கோபக்குரல்...!!!


Thursday, 15 March, 2012

ஒப்புமை.....!!!

காணும் போதெல்லாம் கண்டு கொள்ளாமல் செல்கிறோம்;
கூட்டத்தின் நடுவில் இருந்தால்...

பேசும் வார்த்தைகளும் விவாதங்கள் ஆகின்றன;
நண்பர்கள் நடுவில் இருந்தால்...


மோதிக்கொள்ளும் கடலின் அலைகளை
ரசிக்கும்பார்வையாளர்கள் போல;
ரசிக்கின்றனர் நம் ஊடல்களையும்!!!!அலைகளுக்கு அடியில்
அமைதியாய் இருக்கும் மணல் போல;
மறைமுகமாக மறைந்திருக்கிறது
நம் புரிதல்களும்;
நம் மனதோடு மட்டும்!!அகவரையில் ஆராய்ந்து பார்த்தால்;
அடிக்கடி தோன்றி மறைகின்றனர்;
ரசிகர்களுக்காக போலியாய்
போட்டி போட்டுக் கொள்ளும்
திரைப்பட நாயகர்கள்....!!!

Monday, 12 March, 2012

உடன்பிறப்பு.....!!!

அன்னையின் அன்பு; தந்தையின் தாக்கம்..,
இவற்றையும் மிஞ்சியது உன் ஆதிக்கம் - என்னில்!

ஆசை ஆசையாய் அடிப்பது; அடுத்த நேரம் அன்பு செய்வது..,
இரண்டிலும் உன்னை மிஞ்ச ஆளில்லை.!

அன்னையிடம் மறைத்தது; தந்தையிடம் தயங்கியது ..,
ஒன்று விடவில்லை உன்னிடம் மட்டும்..!

யாரைப் பற்றியும் நண்பர்களிடம் சொல்லலாம்..,
அந்த நண்பர்கள் பற்றியும் உன்னிடம் சொல்லலாம்...!

நீ சொன்ன வேலையை உடனே முடிக்க ஆசைதான்..,
இருந்தாலும் உன் இரண்டு அடிகளுக்காக இழுத்தடிப்பேன்....!

நான் மட்டுமா??? நீயும் தானே !!!!

நான் கேட்டவுடன் எதையும் வாங்கித் தர விருப்பம் தான்-ஆயினும்..,
என்னைக் கெஞ்ச வைப்பதில் கொஞ்சம் ஆனந்தம்உனக்கு.....!

ஓர் வீட்டிலும் கண்டதில்லை அண்ணன் போன்ற அப்பாவை..,
ஆனால்எத்தனை வீடுகளில் அண்ணனே அப்பாவாய்......!

ஆம்அண்ணன்ஆண்டவனின் ஓர் அற்புத படைப்பு!!!!!

ஓர் அண்ணன் கிடைப்பதே உலக அதிசயம்...,
ஓரிரு அண்ணன் கிடைத்தால் நீ தான் உலகத்தின் அதிசயம்...!!!
Wednesday, 7 March, 2012

கலையாதிருக்க.....
இடஞ்சலாய் இருந்தால் சொல்லிவிடு ,

நிறுத்தி விடுகிறேன்;என்

இதயத் துடிப்பையும்.... உன் தூக்கம்

கலையாதிருக்க!!!!


Wednesday, 11 January, 2012

இருவர்


ஒவ்வொருவர் வெற்றிக்கு பின்னும் ஒருவர் உண்டு ;

என் வெற்றிக்குப்  பின்னும் உண்டு, ஒருவர் அல்ல  இருவர் !!!

என்னை கருவாக்கியவள்  அவள்; என்னை உருவாக்கியவர் அவர்...,

என் பசிதாகம் தீர்த்தவள் அவள்; என் அறிவுதாகம் தீர்த்தவர் அவர்...,

உதிரத்தை உணவாக்கியவள் அவள்; உழைப்பை உரித்தாக்கியவர் அவர்...,

பெண்ணின் மனது பெண்ணிற்கு தான் புரியும்????  ஒருவேளை

இக்கூற்று பொய்யாகலாம் என் வாழ்வில்!!!!    ஆம்

என் வெற்றிக்குப் பின்னும் உண்டு ஒருவர் அல்ல இருவர்

......என் தாயும்; என் தந்தையும்.....

என்ன செய்வேன் உங்கள் இருவருக்கும் நான்???

செய்ய விழைவதை செய்வேன் இப்பிறவியில் ;

பிறப்பேன் எழுபிறவியும் உங்கள் மகளாய்.....!!!